தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை கைது செய்த தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் தனிப்படை...

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை கைது செய்த தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர்  தனிப்படை...

தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக 2001ம் ஆண்டு நடந்த மூவர் கொலை வழக்கில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து, பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரபல ரவுடி கைது - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடைச்சிவிளை கிராமம், விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்த மயிலையா மகன் கணேசன் தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மிக்கேல் மகன் பீட்டர் என்ற ஜேசுமரியான் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 03.06.2001 அன்று கணேசன் என்பவர் தனது சகோதரர்களான முருகேசன், வையனபெருமாள், ஆதிலிங்கராஜன் ஆகியோர், அவர்களது வீட்டருகில் டிரக்கரை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பீட்டர் என்ற ஜேசுமரியான் மற்றும் அவரது மகன்களான சுதாகர் (47), விஜயேந்திரன், கோபி மற்றும் அவரது உறவினரான சிலுவைப்பிச்சை மகன் குருசமுத்து ஆகியோர் சேர்ந்து அரிவாள், இரும்புக் கம்பி, வேல்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால்  தாக்கி மேற்படி முருகேசன், வையனப்பெருமாள் மற்றும் ஆதிலிங்கராஜன் ஆகியோரை கொலை செய்துள்ளனர்.

இது சம்மந்தமாக இடைச்சிவிளையைச் சேர்ந்த கணேசன் மனைவி  ஆதிலெட்சுமி அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தனர். இவ்வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கடந்த 04.09.2001 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கனம் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் 1வது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

இவ்வழக்கின் எதிரிகளில் ஒருவரான சுதாகர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்துவந்தார். இதனையடுத்து கடந்த 02.02.2021 அன்று மேற்படி நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

தலைமறைவாக இருந்த மேற்படி மூவர் கொலைவழக்கு எதிரி சுதாகரை உடனடியாக கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தட்டார்மடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  சாம்சன் ஜெபதாஸ் தலைமையிலும்,  தூத்துக்குடி  உதவி ஆய்வாளர்  வேல்ராஜ், தலைமைக் காவலர்கள்  பென்சிங்,  சாமுவேல்,  மாணிக்கராஜ், மகாலிங்கம், காவலர்கள் செந்தில்,  திருமணிராஜன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட மேற்படி தனிப்படையினர் இன்று (18.05.2021) தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் வைத்து எதிரி சுதாகரை மடக்கிப்பிடித்து கைது செய்து செய்தனர்.  இவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி எதிரி சுதாகரை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.