தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மகளிருக்கான சிறப்பு மையம்...

தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மகளிருக்கான சிறப்பு மையம்...

எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாரதியின் வரிக்கு ஏற்ப, இன்று பெண்கள் இடம்பெறாத துறைகளே இல்லை. சமுதாய நலத்தைப் பேணும் வகையில், சமூகச் சேவையிலும் பெண்கள் ஈடுபட்டுவருகின்றனர். 

எந்த இடத்தில் எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், தானே அங்கு சென்று யார் பிரச்னைக்குரிய நபர், பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் என்ன, அதில் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கிறார்கள், அவர்களுக்கான தீர்வு என்ன எனப் பல்வேறு கோணங்களில் பிரச்னையை அலசி ஆராய்ந்து, மிகத் தெளிவான ஒரு முடிவை எடுக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மகளிருக்கான சிறப்பு மையத்தைச் செயல்படுத்திவரும் சமூகப் பணியாளர்களான மோஹன ப்ரியா மற்றும் அபிநயா ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க பணிகள் போற்றத்தக்கது. இவர்கள் சமூகத்துக்கு ஆற்றும் சேவைகள் குறித்து விளக்கக் கேட்டோம்.

``பிறருக்கு உதவுவதில் அதீத திருப்தியை உணர்ந்ததாலேயே நாங்கள் இந்தத் துறைக்கு வந்தோம். நாம் வாழ்வதோடு நம்மால் பிறரும் வாழ்கின்றனர் என்பதில்தான் நமக்கான மனதிருப்தி அமைந்துள்ளது. இன்றைய வாழ்க்கைமுறையில் பெண்களுக்கான வாழ்க்கை என்பது அநேக இடங்களில் ஏமாற்றமாகவே அமைத்துவிடுகிறது. இதனால் பல பெண்களின் வாழ்க்கை கலையிழந்து, கரைந்துவிடுகிறது. இந்த நிலையைப் போக்கத்தான், நாங்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தோம். 

மகளிரின் நலனை உறுதிசெய்வது, பாலினப் பாகுபாடு குறித்த பிரச்னைகளைத் தீர்த்தல், பெண்களின்  பிரச்னைக்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பிவைத்தல், மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள், இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள், பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விவரங்களை கவனித்தல், பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல், அது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்குத் தெரிவித்தல், பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும்பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்தல் போன்றவையே இந்த அமைப்பின் முக்கியச் செயல்பாடுகள்.

கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்குரிய பெண்களின் உரிமைகள் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும் ஏராளமான நடவடிக்கைகளை இந்த மகளிருக்கான சிறப்பு மையம் எடுத்திருக்கிறது. 

எங்களிடம் வரும் எந்தப் பிரச்னைதாரருக்கும் நாங்கள் தீர்வை சொல்ல மாட்டோம். அவர்களின் பிரச்னையை அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து, அதற்கான காரணங்களை அவர்களோடு சேர்ந்து நாங்களும் அலசி ஆராய்ந்து, அதற்கான நல்ல ஒரு தீர்வை அவர்களே எடுக்கும் வகையில் நாங்கள் அவர்களுக்கு நல்வழி காட்டுவதுதான் எங்கள் பணி. எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் கருத்தையோ, தீர்வையோ அவர்களுக்குச் சொல்வதில்லை. 

பெண்களுக்கு அதிகாரமளித்தல் மட்டுமின்றி அவர்களின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், மாநாடுகள் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. திருநங்கைகளுக்கான சமூக அந்தஸ்த்தைப் பெற்றுத்தருவதிலும் மகளிருக்கான சிறப்பு மையம் அயாராது உழைத்துவருகிறது. 

எங்களைப் போன்ற சமூகப் பணியாளர்கள் சென்னை கிரீம்ஸ் சலையில் உள்ள ஆயிரம் விளக்கு காவல் நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கிவரும் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இருப்போம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் களப்பணியின் ஈடுபடச் சென்றுவிடுவோம். 

சமூகநல விசாரணையின்போது தெரிவிக்கப்படும் எந்த ஒரு தகவலும், பிறகுக்குக் கசிந்துவிடாமல் காப்போம். தேவையில்லாமல், எவரும் எந்தச் சூழ்நிலையிலும் விசாரணையில் கிடைத்த தகவல்களை வெளியிடுவதில்லை.  அவற்றில் அதீத கவனம் செலுத்தி, ரகசியமாக வைத்துக்கொள்வோம். 

மகளிருக்கு உதவுவதற்காக மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குகிறோம். மக்களின் வசதிக்காக இலவச தொலைபேசி சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.044 23452685 , 94983 36002, 94999 71896 என்ற எண்ணில் தொடர்புகொண்டு உதவி என்று ஓடி வருவோருக்கு உறுதுணையாக இருந்து, காப்போம். மேலும், மதுரை, திருநெல்வேலி, சேலம்  போன்ற இடங்களிலும் மகளிருக்கான சிறப்பு மையம் இயங்கிவருகிறது'' என்றனர் மோஹன ப்ரியா மற்றும் அபிநயா இருவரும்.

 

சென்னை ஆயிரம்விளக்கு மகளிர் காவல்நிலையம் ... 044 23452685 , 94983 36002, 94999 71896

சேலம் சூலமங்கலம் மகளிர் காவல்நிலையம்... 0427 2333552

மதுரை தல்லாக்குளம் மகளிர் காவல்நிலையம் ... 0452 2538893,94981 01386

திருநெல்வேலி பாளையங்கோட்டை மகளிர் காவல்நிலையம்... 0642 2562659

இவர்களைப் போன்ற சாதுர்யமான மனித நேயர்களின் நிழலில்தான் எதிர்கால வாழ்க்கைமுறை அமைந்துள்ளது என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.