காவலர் வீரவணக்க நாள் நெகிழ செய்த நெல்லை மாநகர காவல்துறை...

காவலர் வீரவணக்க நாள் நெகிழ செய்த நெல்லை மாநகர காவல்துறை...

காவலர் வீரவணக்கம் அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன  ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில்  நெகிழ செய்யும் நிகழ்வாக இன்று காவலர் வீரவணக்க நாள் நடைபெற்றது.நெல்லை மாநகர காவல்துறையில் கடமையாற்றும்போது உயிர்துறந்த காவலர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு சென்று அஞ்சலி  செலுத்தும் நிகழ்வு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக்.மோ டாமோர் (இ.கா.ப) அவர்களின் அறிவுரைப்படி நடைபெற்றது.

ஆய்வாளர் சாது சிதம்பரம் (2020), சார்பு ஆய்வாளர் முருகன்(2020) காவலர்கள் பழனிதாஸ்(1962) ராமசாமி (1969) ஆகியோரது இல்லங்களுக்கு சென்று பாளையங்கோட்டை ஆய்வாளர், தச்சநல்லூர் ஆய்வாளர், நெல்லை டவுன் ஆய்வாளர், மேலப்பாளையம் ஆய்வாளர் மற்றும் காவலர்கள்   மரியாதை செய்தனர். காவலர் தினத்தில் , மாநகர காவல்துறை காவலர்களின் இச்செய்கை அவர்தம் குடும்பத்தாரிடையே நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

அதிலும் குறிப்பாக 58 ஆண்டுகளுக்கு முன் கள்ளச்சாராய வேட்டையின் போது தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணமடைந்த பழனிதாசின் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த ஆய்வாளர்களும் காவலர்களும் சென்ற போது அவரது குடும்பத்தினர் நெகிழ்ந்து போய்விட்டனர்.

58 ஆண்டுகளுக்கு பிறகும் அவரது தந்தையின் தியாகம் நினைவு கூறப்பட்டதில் காவலர் குடும்பம் என்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்தனர்.

முன்னதாக திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில்  காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. 

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக்.மோ டாமோர் (இ.கா.ப) , திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபிநபு (இ.கா.ப) , திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் (இ.கா.ப) , தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணசிங் (இ.கா.ப) , நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் மகேஷ்குமார் (இ.கா.ப) (குற்றம் மற்றும் போக்குவரத்து) , நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) , நெல்லை மாநகர  CCRB  ADC வெள்ளத்துரை , சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்  பிரதீப் இ.கா.ப , ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து, 72 குண்டுகள் முழங்க, இன்னுயிர் நீர்த்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.