பெண் ஊழியரிடம் திருட்டு போன தாலி சங்கிலியை நூதன முறையில் மீட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன்

பெண் ஊழியரிடம் திருட்டு போன தாலி சங்கிலியை நூதன முறையில் மீட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன்

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அரசு சுகாதார மைய ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு வேலை பார்க்கும் பெண் ஊழியர் உஷா(வயது 48) கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலி திருட்டு போய் விட்டது. பணி முடிந்த பிறகு இரவு அவர் அறை ஒன்றில் படுத்து தூங்கினார். காலையில் கண் விழித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கழுத்தில் அவர் அணிந்திருந்த தாலிசங்கிலி திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து உஷா, எழும்பூர் போலீசில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் ரகுபதி மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

சம்பவம் நடந்த ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆஸ்பத்திரிக்கு வெளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, சம்பவம் நடந்த இரவு வெளியில் இருந்து யாரும், ஆஸ்பத்திரிக்குள் நுழையவில்லை என்பது தெரிய வந்தது. எனவே சம்பவம் நடந்த அன்று ஆஸ்பத்திரிக்குள் இருந்த 11 ஊழியர்களில் யாராவது ஒருவர்தான், உஷாவின் தாலி சங்கிலியை திருடி இருக்க வேண்டும் என்று போலீசார் முடிவுக்கு வந்தனர்.அந்த 11 ஊழியர்கள் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டார். உங்கள் 11 பேரில் ஒருவர்தான் நகையை திருடி இருப்பது, உறுதியாகிவிட்டது. நகையை திருடிய நபர், தானாகவே முன்வந்து நகையை சம்பவம் நடந்த அறைக்குள் ரகசியமாக போட்டு விட்டு போகலாம்.அவ்வாறு செய்தால் நடவடிக்கை கடுமையாக இருக்காது. நாங்களாக குற்றவாளியை கண்டுபிடித்தால், குற்றம் புரிந்த நபர் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும், என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. நகை திருடிய குற்றவாளிக்கு, ஒரு நாள் அவகாசமும் கொடுக்கப்பட்டது.ஒரு நாள் அவகாசமும் முடிந்துவிட்டது. ஆனால் குற்றவாளி நகையை போடவில்லை. இதனால் போலீசார் குறிப்பிட்ட 11 பேரையும் வரவழைத்து, இன்னொரு வாய்ப்பு வழங்கினார்கள். திருட்டு நடந்தபோது, உஷா தூங்கிய அறைக்குள் 11 பேரையும் தனித்தனியாக அனுப்பி வைப்போம் என்றும், திருடிய நபர் நைசாக நகையை அறைக்குள் போட்டுவிட்டு போகலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.அதன்படி 11 பேரும் குறிப்பிட்ட அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். நகையை போட்டவர் யார்? என்று தெரியாமல் இருக்க 11 பேரையும் அவர்களின் கண்களை கட்டி, அறைக்குள் தனித்தனியாக அனுப்பி வைத்தனர்.11 பேரும் போய்விட்டு வந்த பிறகு அறையை பார்த்தபோது, அந்த அதிசயம் நடந்தது. அறைக்குள் திருட்டு போன ஊழியர் உஷாவின் தாலிசங்கிலி கிடந்தது. அதை மீட்ட போலீசார், உதவி கமிஷனர் ரகுபதி வாயிலாக உஷாவிடம் ஒப்படைத்தனர். அவர் தரையில் முட்டிப்போட்டு அமர்ந்து கும்பிட்டு கதறி அழுதபடியே போலீசாருக்கு வித்தியாசமாக நன்றி தெரிவித்து, தாலிச்சங்கிலியை திரும்ப பெற்றுக்கொண்டார்.திருட்டு போன நகையை நூதன முறையில் கண்டுபிடித்து மீட்ட எழும்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் உள்ளிட்ட போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.நகை மீட்கப்பட்டாலும், சட்டப்படி குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
JPR,Chennai.