தென்சென்னையில் தலைதுாக்கும் ரவுடிகளை களைய புது வியூகம்!

தென்சென்னையில் தலைதுாக்கும் ரவுடிகளை களைய புது வியூகம்!

தென்சென்னையில் விரைவில் ரவுடிகளை களையெடுக்க தனி வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாம். ரவுடி பினு கைதுக்கு பிறகு சென்னைக்குள் சீனில் வராமல் திரைமறைவில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட ரவுடிகள் இப்போது சென்னையில் யாரும் இல்லை என இருந்தது. பழிக்குப் பழிவாங்கும் சம்பங்களும் படிப்படியாக குறைந்துள்ளன என போலீசார் மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் சென்னை பட்டினப்பாக்கம், ஆர்ஏ புரம், ஐஸ்அவுஸ் பகுதிகளில் நடந்த தொடர் கொலைகள் ரவுடிகள் லேசாக தலையெடுப்பதை அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது. ஐஸ்அவுசில் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அப்பாசை ரவுடிகள் முன்விரோதம் காரணமாக ஓடஓட விரட்டிக் கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பீதியை கிளப்பி விட்டது. அந்த கொலை வழக்கில் அப்பாசின் நண்பர் இம்ரான் மற்றும் தாவூத் ஆகிய இருவர் கோர்ட்டில் சரண்டர் ஆகியுள்ளனர். மீதிவுள்ளவர்கள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். கொலைகளுக்கு பெயர்போன வடசென்னையில் ரவுடிகளின் கொட்டம் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் நிலையில் தென்சென்னை பகுதியில் நடந்த தொடர் கொலைகளை தடுக்கும் வகையில் அங்கு வசிக்கும் முன்னாள், இந்நாள், திருந்தி வாழும் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறதாம். அவர்களை தீவிரமாக கண்காணித்து 109 சட்டப்பிரிவின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியமாக அவர்களை சென்னையை விட்டு அப்புறப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.